தெற்கு ஈரான்: கடந்த பிப்ரவரி 28 அன்று தெற்கு ஈரானில் உள்ள கடற்படை தளம் மற்றும் தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை பாகங்கள், அமெரிக்காவின் ‘குரூஸ்’ (Cruise) ரக ஏவுகணைக்குரிய அடையாளங்களைக் கொண்டுள்ளதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ (The New York Times) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஈரானின் அரசு ஊடகத்தால் டெலிகிராம் (Telegram) செயலியில் பகிரப்பட்ட இந்த சிதைந்த ஏவுகணை பாகங்களின் புகைப்படங்கள், “மினாப் (Minab) பள்ளி குழந்தைகள் மீது விழுந்த அமெரிக்க ஏவுகணையின் எச்சங்கள்” என அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
முன்னதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஆய்வின்படி, ‘ஷஜாரா தய்யேபா’ (Shajarah Tayyebeh) தொடக்கப் பள்ளியின் பெரும்பகுதி துல்லியமான வான்வழித் தாக்குதலால் (Precision strike) முழுமையாகத் தகர்க்கப்பட்டது. தற்போது அந்தச் சிதைந்த பள்ளிக் கட்டிடத்தின் அருகே ஒரு மேசையில் இந்த ஏவுகணை பாகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் பெரும்பாலான குழந்தைகள் உட்பட குறைந்தது 175 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
